இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

இடைத்தரகர்கள் கொண்டு வரும் நெல் மூடைகளை அரசு நெல்கொள்முதல் நிலையத்தினர் பெறாமல் விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
Published on

கணியூர்,

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு இது அறுவடை காலமாகும். கல்லாபுரம், குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு பகுதிகளில் தற்போது நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசனம் பெறுகிறது.

இந்த நிலையில் அமராவதி பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் பல துறைகளில் பணம் பல வழிகளில் செலவிடப்பட்டும், நிதி ஒதுக்கப்பட்டும் வரும் நிலையில் விவசாயிகளின் நிலை மட்டும் அப்படியே உள்ளது. குறிப்பிட்ட ஒரு ஏக்கரில் விவசாயம் செய்ய, வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச, பாய்ச்சிய தண்ணீரில் உழவுசெய்ய, நிலத்தில் நாற்று நட, நாற்று நட்ட பின்னர் களை எடுக்க, கதிர் விளைந்த பின்னர் அறுவடை செய்ய, அறுவடை செய்த நெல்லை மூடை பிடிக்க என பல வழிகளில் பணம் தேவைப்படுகிறது. ஆனால் நெல்லுக்கு மட்டும் உரிய நிர்ணய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவதிப்பட்டு வரு கிறார்கள். இடைத்தரகர்கள் காரணமாக விவசாயிகள் தங்கள் நெல்லை சுயமான விலைக்கு விற்க முடியவில்லை.

மேலும் விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு வாங்கி கொண்டு சென்று அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிக விலைக்கு விற்று அவர்கள் லாபம் பெறுகின்றனர்.

இதற்காக விவசாயிகளிடம் சாமர்த்தியமாக பேசி, அவர்களின் நெல் மூடைகளை அடிமட்ட விலைக்கு வாங்கிச்சென்று விடுகிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இடைத்தரகர்கள் கொண்டு வரும் நெல் மூடைகளை அரசு நெல்கொள்முதல் நிலையத்தினர் பெறக்கூடாது. அத்துடன் இடைத்தரகர்கள் நெல் மூடைகள் கொண்டு வந்ததால் அவற்றை திருப்பி அனுப்பிட உத்தரவிட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விவசாயிகளிடம் இருந்து அசல் சிட்டாவை பெற்று ஆதார் அடையாள அட்டையை மையப்படுத்தி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய முன்வரவேண்டும். அதுபோல் அவசரகதியிலும், பெயரளவிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் விவசாயிகளின் உண்மையான உழைப்பை வாழ வைக்கும் நோக்குடன் இந்த திட்டத்தை முறையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com