

கடலூர்,
விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வங்கியில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய பணிகளை தொடங்குவதற்கு உதவியாக நிபந்தனையின்றி புதிய கடன்கள் வழங்க வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்காப்பீட்டு பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா கால உதவியாக சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் ஜவான் பவன் சாலை அருகில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பழனி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் சுப்பராயன், கட்டுமான சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் வீராணந்தபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பசுமை வளவன், தமிழ்நாடு விவசாய சங்க தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மேல்அழிஞ்சிப்பட்டு, நடுவீரப்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.