விவசாயிகள் மண்வள அட்டை பெற்று பயன்பெறுங்கள் கலெக்டர் தகவல்

விவசாயிகள் மண்வள அட்டை பெற்று பயன் அடையுங்கள் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மண்வள அட்டை பெற்று பயன்பெறுங்கள் கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மண்வளத்தை காத்து உணவு தானிய உற்பத்தியை தொடர்ந்து பெருக செய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டைகளை வழங்கி வருகிறது. மண்வளத்தை பாதுகாத்து உணவு தானிய உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க செய்வதில் நீர்வளம், மண்வளம், மண்ணின்தன்மை போன்றவை முதன்மையாக பங்கு வகிக்கிறது.

பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற்றிட தழைச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றது. மேற்கூறிய சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பயிருக்கான உரத்தேவையை கணக்கிடுவதற்கு மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு விவரம் அறிந்திட மண்பரிசோதனை செய்வது மிகமிக அவசியமாகும். மண் பரிசோதனை மூலம் நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவு அறிந்து உரமிட மண்வள அட்டை திட்டம் மூலம் தற்போது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மண்வள அட்டை திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதிஉதவியோடு 2015-ம் ஆண்டு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு இருவருட சுழற்சி முறையில் (2015-2016, 2016-2017 முதல் சுழற்சி மற்றும் 2017-2018, 2018-2019 2-ம் சுழற்சி ) விவசாயிகள் வயல்களில் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் ஆய்வு செய்து மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் முதல் சுழற்சியில் மொத்தம் 1 லட்சத்து 81 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

2-ம் சுழற்சியில் மண்வள அட்டைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர சிபாரிசின்படி பயிருக்கு தேவையான உரம் இடுவதால் உரசெலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படுகிறது.

சமச்சீரான உரம் இடுவதன் மூலம் மகசூல் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். எனவே வரும் காலங்களில் மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகள் விற்பனையாளர்களிடம் இருந்து விற்பனை முனைய கருவி மூலம் பெற்றிட திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு விவசாயியும் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு வைத்திருப்பது போல் மண்வள அட்டையையும், பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். மண்வள அட்டை உபயோகத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகள் மத்தியிலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் முன்னோடி திட்டமாக நடப்பு ஆண்டில் 14 வட்டாரங்களில் 3 கிராமங்களில் (நல்லான்காவனூர், அத்திங்காவனூர், அகரம்) மண்வள அட்டையின் சிபாரிசின் அடிப்படையில் மட்டும் விவசாயிகள் உரங்களை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனை முனைய கருவி மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அனைவரும் மண்வளஅட்டை பெற்று அதன் அடிப்படையில் உரமிட்டு மண்வளம் காத்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com