இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும், வேலூர் கலெக்டர்

நமது மண்ணின் தன்மையை பாதுகாக்க இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும், வேலூர் கலெக்டர்
Published on

வேலூர்

நமது மண்ணின் தன்மையை பாதுகாக்க இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது.

வேளாண் விற்பனைக்குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித், துணை இயக்குனர் நரசிம்ம ரெட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் மேம்பட அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் 4 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம், பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன.

இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இயற்கை பேரிடர்கள் நிகழாது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் இருந்தனர். ஆனால் நிவர் புயலின் போது அதிகளவு விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன.

பயிர் காப்பீடு செய்யாததால் அந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வாங்க முடியவில்லை. எனவே விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.

விவசாய உற்பத்திக்கு செலவு அதிகமாக உள்ளது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இடைத்தரகர்களை ஒழிப்பது பெரும் சவாலாக உள்ளது. இடைத்தரகர்களை ஒழிப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வேளாண் உற்பத்திக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வேளாண் உற்பத்தியில் இடுபொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும்.

நமது மண்ணின் தன்மை பாதுகாக்கப்படும். வீரியமிக்க விதைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். விளைச்சலில் ஒரு பகுதியை விதைகளாக மாற்ற விவசாயிகள் அவற்றை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் ஆய்வு

கூட்டத்தில், கலந்து கொண்ட விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்த விலைக்கு மதிய உணவு வழங்க வேண்டும், காட்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அதற்கு கலெக்டர் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக கலெக்டர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குளிர்சாதன கிடங்கில் வைக்கப்ப்பட்டிருந்த விவசாய விளைபொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com