

திருவண்ணாமலை
குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று 2022-ம் ஆண்டின் முதல் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பெரும்பாலான துறையை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்க வில்லை. அலுவலர்களுக்காக காத்திருந்த விவசாயிகள் திடீரென வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் திருவண்ணாமலை ஒன்றிய அலுவலர்கள், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்துவதாக கூறினர். அதனை ஏற்காத விவசாயிகள் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.
பரபரப்பு
பின்னர் அலுவலர்கள், உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு மீண்டும் அடுத்த வாரம் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்துவது குறித்து எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர்.
இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.