

சாயல்குடி,
சாயல்குடி அருகே உள்ள தரைக்குடி கண்மாய் சுமார் 626 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்ற கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டது. இதை எடுத்தவர்கள் கடந்த 1 வருடமாக காலம் தாழ்த்தி மரங்களை வெட்டி வருகின்றனர். இதை கண்டித்து கிராம மக்கள் தரைக்குடி ஜமாத் தலைவர் முகமது அபுபக்கர் தலைமையில் நேற்று திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோக்கின்ஜெரி, கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் கிராம மக்கள், கண்மாயில் கருவேல மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டால் பஸ் மறியலில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், கருவேல மரங்கள் வெட்டுவது நிறுத்தப்படும் என்று கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஹைதர் அலி, ஆர்.சி.புரம் பிரான்சிஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் கூறியதாவது: கடந்த ஆண்டு நீர் நிலைகள், அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தரைக்குடி கண்மாயில் இருந்த கருவேல மரங்களை வெட்ட டெண்டர் விடப்பட்டது. இதை எடுத்தவர்கள் பணிகளை உடனடியாக தொடங்காமல் கடந்த 1 வருடமாக காலம் தாழ்த்தி மரங்களை வெட்டி வருகின்றனர்.
தற்போது பெரிய அளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. வெட்டிய மரங்களை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள இடத்தில் கரிமூட்டம் போடுகின்றனர். இதில் இருந்து எழும் புகையால் காற்று மாசுபட்டு பள்ளி மாணவமாணவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெண்டர் எடுத்து வெகுநாட்களாகி விட்டதால் இனிமேலும் இந்த கண்மாயில் கருவேல மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு தொடர்ந்து கருவேல மரங்களை வெட்டினால் பஸ் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.