மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் விக்கிரமராஜா பேட்டி

ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் விக்கிரமராஜா பேட்டி
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வந்தார்.

அவரிடம் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், நிரந்தர கடைகள் கட்டி கொடுக்கவும், மழை பெய்தால் சுகாதார கேடாக மாறி பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். மார்க்கெட்டை சுற்றி பார்த்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரிடம் மனு

திருச்செந்தூர் என்பது அறுபடை வீடுகளில் 2-வது படை வீடு. உலக முழுவதும் பக்தர்கள் வந்து செல்ல கூடிய இடம். சுற்றுலா ஸ்தலம். இங்கு நகரின் மையப்பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. ஆனால் மழை பெய்தால் வெள்ளகாடாக மாறி சுகாதாரம் இல்லாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறது. இந்த மார்க்கெட்டில் 275-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகிறார்கள். மேலும் இங்கு சுமார் 100 பெண்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை.

அதேபோல் வியாபாரிகளுக்கு நிரந்தர கடைகள் கட்டி கொடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு கோரிக்கைக்கும் அரசிடம் போராட வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக டெல்லியில் 50 நாட்களுக்கு மேல் விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு அவர்களை புறம்தள்ளி கொண்டு இருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகத்தை..

இந்தியாவில் விவசாயிகள், வியாபாரிகள் நாட்டின் முதுகெலும்பு என்ற வாசகம் மாற்றப்பட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு அரசு நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் மாற்றும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் வெளிநாடு சக்திகள் உள்ளே நுழைந்து வணிகர்களை சூறையாடிக்கொண்டு இருக்கின்றனர். எனவே, ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் சங்களின் பேரமைப்பு தலைவர் காமராஜ் நாடார், திருச்செந்தூர் தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பழக்கடை திருப்பதி, செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட வியாபாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com