நுகர்பொருள் வாணிப கிடங்கில் தீ விபத்து

மதுரை கப்பலூர் அருகே உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
நுகர்பொருள் வாணிப கிடங்கில் தீ விபத்து
Published on

மதுரை,

மதுரை கப்பலூர் அருகே இ.பி. பஸ் நிறுத்த பகுதியில் அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கிட்டங்கி உள்ளது. திறந்த வெளி கிட்டங்கியாக செயல்படும், இங்கிருந்து தென்மாவட்டங்களில் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை 3 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தின் அருகே யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த தீயானது கொஞ்சம் கொஞ்சமாக பரவி, கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த மூங்கில் கம்புகள், தார்ப்பாய்கள், சாக்குகள் போன்றவற்றின் மீது பரவியது. தீயானது மளமளவென பரவி எரிந்ததில் அந்தபகுதியே கரும்புகை மண்டலமாக காணப்பட்டது. இந்த புகையானது நான்கு வழிச்சாலை முழுவதும் பரவியது. இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து திருமங்கலம், கள்ளிக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கிடங்கில் நின்ற மரங்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த மூங்கில் கம்புகள், தார்ப்பாய்கள் தீயில் எரிந்து நாசமானது. தீவிபத்து நடந்த இடத்தின் அருகே கப்பலூர் துணை மின்நிலையம் இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அந்த துணை மின்நிலையம் தீ விபத்தில் இருந்து தப்பியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் சம்பவ இடத்திற்கு வந்து, தீயினால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் தேவையற்று கிடந்த பொருட்களின் மீது தீ பிடித்ததால் பெருமளவு சேதம் ஏற்படவில்லை. பஸ் நிறுத்த பகுதியில் யாரோ தீ வைத்து விட்டு சென்றதன் விளைவாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com