வடசேரி சந்தையில் 3 கடைகள் தீயில் எரிந்து நாசம்

நாகர்கோவில் வடசேரி சந்தையில் 3 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடசேரி சந்தையில் 3 கடைகள் தீயில் எரிந்து நாசம்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு பல இடங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. எனவே இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் சந்தையின் வலதுபுறத்தில் பஸ் நிலையத்துக்கு செல்லும் குறுக்கு வழி அருகே உள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகே இருந்த மேலும் 2 கடைகளிலும் தீ பரவியது.

சேதம் அடைந்தன

இந்த தீ விபத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கடைகள் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகின. கடைகளில் வைத்திருந்த பழ வகைகள் அனைத்தும் தீயில் கருகின.

மேலும் கடை அருகே நிறுத்தியிருந்த ஒரு மோட்டார் சைக்கிள், அங்கு மரத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஆகியவையும் தீயில் சேதம் அடைந்தன. கடைகளில் தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

போலீஸ் விசாரணை

தீ விபத்தில் சிக்கிய 3 கடைகளுமே தற்காலிக கடைகள் ஆகும். ஆனால் கடைகளில் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்று வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com