

திருச்சி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு முதல்-அமைச்சர் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார்.
திருச்சி மாவட்ட எல்லையான தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரத்தினவேல் எம்.பி., முசிறி எம்.எல்.ஏ. செல்வராஜ் ஆகியோர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் வரவேற்பு அளித்தனர். இதேபோல் தொட்டியம் வாணப்பட்டறை கார்னரில் பெரம்பலூர் எம்.பி. மருதைராஜா, தொட்டியம் நகர செயலாளர் திருஞானம்பிள்ளை, ஒன்றிய இணை செயலாளர் சுபத்ரா சசிக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுத்தனர்.
இதேபோல் முசிறி கைகாட்டியில் முதல்- அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, அண்ணாவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி காந்திமார்க்கெட் பழைய பால்பண்ணை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் காரில் இருந்து இறங்கி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டு நின்று முதல்-அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்.பி. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது, பழைய பால்பண்ணை அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.