

கோவை,
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் இடைத்தரகராக செயல்பட்டவர் சுகேஷ் (வயது 35). இவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இவர், கடந்த 2010-ம் ஆண்டு கோவை கணபதி பகுதியை சேர்ந்த ராஜவேலு (40) என்பவரிடம் கர்நாடக மாநிலம் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து, இணை செயலாளர் பேசுவதாகவும், சமையல் உபகரணங்கள் டெண்டர் எடுத்துக்கொடுப்பதாக கூறி ரூ.2.43 லட்சம் பெற்று மோசடி செய்தார்.
திடீர் மாயம்
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகேஷ் மற்றும் அவருடைய தந்தை சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஜாமீனில் சென்றபோது சுகேஷ் திடீரென்று மாயமானார். இதற்கிடையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேசை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், திகார் சிறையில் இருக்கும் சுகேசை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
கோவை கோர்ட்டில் ஆஜர்
அதைத்தொடர்ந்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அவரை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை நேற்று வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் உத்தரவிட்டார்.
சுகேசுக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. எனவே போலீசார் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ரெயில் மூலம் கோவை அழைத்து வந்தனர். அவர் நேற்று காலையில் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காவல் நீட்டிப்பு
அவரை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி வரை சிறையில் அடைக்க கூறி நீதிமன்ற காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் டெல்லி அழைத்துச்சென்றனர்.
கோவையில் இருந்து டெல்லிக்கு உடனே செல்ல ரெயில் இல்லாததால் போலீசார் அவரை கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்துச்சென்று, அங்கிருந்து மங்களூரு வழியாக டெல்லி செல்லும் ரெயிலில் அழைத்துச்சென்றனர்.