அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

அம்மா உணவகங்களில் 3 வேளை இலவச உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
Published on

மதுரை,

மதுரையில் கொரோனா தடுப்பு பணிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பேட்டரி மூலம் இயங்கும் 100 கிருமி நாசினி கைத்தெளிப்பான் எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதனை அவர் மாநகராட்சி கமிஷனர் விசாகனிடம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட 7 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மளிகைக்கடைகள் மூலம் டோர் டெலிவரி செய்யப்படுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு நபர் இறந்து விட்டார். மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நவீன மினி ஜெட் ராடர் எந்திரம், 100 பேட்டரி கைத் தெளிப்பான், 2 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி, 1000 கையுறைகள், 500 பாதுகாப்பு உடைகள் ரூ.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை வழங்கலாம். அரசியல் பண்ணுவதற்கு இது உகந்த தளம் அல்ல. நேரமும் அல்ல. ரூ.500 மதிப்புள்ள 19 பொருட்கள் கொண்ட மளிகை பொருட்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் கடைகளில் வாங்குவதை விட 10 சதவீதம் குறைவான விலையில் கூட்டுறவு கடைகளிலும், நியாய விலைக் கடைகளிலும் இந்த பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 12 அம்மா உணவகங்களிலும் இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும். அதற்கான செலவுத்தொகை அனைத்தையும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com