திருவள்ளூர் மாவட்டத்தில் 24 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி உள்ள 24 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 24 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் - கலெக்டர் தகவல்
Published on

பொன்னேரி,

சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பேடு, அழிஞ்சிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் தனியார் நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இவர்கள் வேலை இல்லாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு நேரில் சென்று அங்கு தங்கி உள்ள வெளிமாநில தொழிலாளர்களை பார்வையிட்டார். பின்னர் அவர்களுக்கு தேவையான தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 24 ஆயிரம் பேர் தங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட் களை வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினிரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜானகிராமன், துணை தாசில்தார்கள் மதிவண்ணன், வாசுதேவன், வருவாய் ஆய்வாளர் ஜெயகிர்பிரபு, கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து அத்திப்பேடு ஊராட்சியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கும் உணவு பொருட்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார். அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com