2 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூரில் 2 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
2 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் மூலம் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதிஉதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அட்லஸ் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கீதா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி ரூ.12 கோடியே 92 லட்சம் வழங்கி அவர் பேசியதாவது:-

பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அவர் கொண்டு வந்த மற்றும் அறிவித்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று எவ்வளவு உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.

ஒரே நிகழ்வாக 2 ஆயிரம் பேருக்கு வழங்க பயனாளிகள் பட்டியல் தயாராகி ஒப்புதல் கிடைத்ததும் வழங்கப்படுகிறது. இதில் பட்டப்படிப்பு படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்தியாவில் பட்டப்படிப்பு படித்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலம் தமிழகம். எல்லா துறைகளிலும் முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கரூர் மாவட்டத்தில் இதுவரை 16,228 பத்தாம் வகுப்பு மற்றும் பட்டம் படித்த பெண்களுக்கு ரூ.57 கோடியே 94 லட்சம் நிதி உதவியும், ரூ.24 கோடி மதிப்பிலான தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்திற்கு பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மேலும் 2 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ரூ.85 கோடி மதிப்பீட்டில் நெரூர்- உன்னியூர் இடையே புதிய உயர்மட்ட பாலம் அமைக்கவும், ரூ.77 கோடி மதிப்பீட்டில் ஈரோடு ரோடு குட்டகடை முதல் வீரராக்கியம் வரை சுற்று வட்ட சாலை அமைக்க முதல் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறாத மாவட்டங்களில் இந்திய அளவில் கரூர் 3-வது இடத்தில் உள்ளது என்றார்.

விழாவில் கரூர் உதவி கலெக்டர் சந்தியா, மாவட்ட சமூகநல அலுவலர் ரவிபாலா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்க்கண்டேயன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் கமலக்கண்ணன், வி.சி.கே.ஜெயராஜ், செல்வராஜ், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்.தானேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com