ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சைமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
Published on

திருப்பூர்,

சைமா சங்க தலைவர் வைக்கிங் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

100 ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கும் திருப்பூர் பின்னலாடை தொழில் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தொழில் கடந்த 2 ஆண்டுகளாக உள்நாட்டிலும், ஏற்றுமதியிலும் சிரமப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அதிகளவு தொழிலாளர்களை ஒரே இடத்தில் வைத்து தொழில் செய்வது என்பது முடியாத சூழ்நிலை. அந்த அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் திருப்பூரில் இல்லை. தொழிலாளர்கள் தங்குவதற்கு அவர்களின் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு.

இதன் காரணமாக வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் நிலையாக பணியில் தொடர்வதில்லை. இதனால் திருப்பூரில் இருந்து 50 மைல் சுற்றளவுக்கு இருக்கும் கிராமங்களில் விவசாய நிலங்களில் உள்ள வீடுகளிலும், அந்தந்த கிராமங்களில் உள்ள சிறிய செட்டுகளிலும் திருப்பூருக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர்களை சேர்த்துக்கொண்டு, திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகளை வாங்கிக்கொண்டு அதனை தைத்து விற்பனை செய்து பிழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதை சார்ந்தவர்கள் அதிகம் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களையும் ஜி.எஸ்.டி. சேர்த்து கட்ட வேண்டும் என்கிற அரசின் உத்தரவு நிலைகுலைய வைக்கிறது. குடிசை தொழில் போல அருகில் இருப்போர்களையும், கிராமத்தில் உள்ள பெண்களையும் வீட்டு வேலை போக மீத நேரங்களில் தொழிலை கற்றுக்கொடுத்து அவர்களின் குடும்ப செலவிற்கு உதவி செய்து வருகிறார்கள். மிகவும் வறட்சியான கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த பனியன் தொழில் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

எனவே பனியன் சார்ந்த தொழில்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவியாக இருக்கும் பனியன் சார்ந்த ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். கூலிக்கு தயார் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் சிறிய கிராமங்களில் உள்ள கிராம விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் பெரிய உதவியாக இருக்கிறது. அதே சமயம் அந்த நிறுவனங்களை நடத்துகிறவர்கள் அதிகம் படிக்காதவர்கள், அவர்களால் ஜி.எஸ்.டி. வசூலித்து க,ட்டி கணக்கு வைக்க இயலாது.

மேலும், வறட்சியான கிராமங்களில் இந்த பனியன் சார்ந்த ஜாப் ஒர்க் செய்யும் கிராம மக்கள் ஓரளவிற்கு வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். எனவே பின்னலாடை தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com