

செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 62). இவரது மனைவி லோகாம்பாள் (55). இவர்களுக்கு ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதில் ராதாகிருஷ்ணன் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டதால், அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குமார் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு வந்து, தற்போது செந்துறையில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். ரவிச்சந்திரனுக்கு மட்டுமே 2 குழந்தைகள் உள்ளனர். மற்ற 2 பேருக்கும் குழந்தைகள் இல்லை.
இவர்களுக்கு இடையே சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பூர்வீக நிலத்தை குமார் பெயருக்கு கோவிந்தராசு எழுதி வைத்தார். இந்நிலையில், அந்த நிலத்தை மீண்டும் தங்களுக்கே எழுதி தரும்படி கோவிந்தராசு மற்றும் சகோதரர்கள் கேட்டுள்ளனர். அதற்கு குமார், தான் வெளிநாட்டில் வேலை செய்து கொடுத்த நகை-பணத்தை திருப்பி கொடுத்தால் தான் நிலத்தை திரும்ப கொடுப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கோவிந்தராசு, அரிவாளால் குமார் தலையில் வெட்டினார். இது தொடர்பான வழக்கும், நிலம் தொடர்பான வழக்கும் அரியலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குமார்(39) மற்றும் அவரது மனைவி அமராவதி(32) ஆகிய இரண்டு பேரையும் கொலை செய்ய கோவிந்தராசு உள்ளிட்டவர்கள் திட்டமிட்டனர். அதன்படி, வீட்டில் தனியாக இருந்த அமராவதியை, மறைந்திருந்த கோவிந்தராசு, லோகாம்பாள், ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் மனைவி செல்வி ஆகியோர் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை வீட்டின் முன்பு கட்டி தொங்கவிட்டனர்.
இதற்கிடையே வேலைக்கு சென்ற குமார், தனது மனைவி அமராவதிக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த கோவிந்தராசு, ராதாகிருஷ்ணன் ஆகியோர் குமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த குமார் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவருக்கு கை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து குமார் தனது மாமனாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது, அமராவதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அமராவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமார் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, செல்வியை கைது செய்தார். இந்நிலையில் கோவிந்தராசு, லோகாம்பாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலை திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கவுதமன் முன்பு சரணடைந்தனர். அவர்களை வருகிற 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து கோவிந்தராசு, ராதாகிருஷ்ணன் ஆகியோரை திருச்சி மத்திய சிறையிலும், லோகாம்பாளை காந்தி மார்க்கெட் மகளிர் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.