நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கடல் அட்டை கடத்தலை தடுக்கும் பொருட்டு வனத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் ஆகிய இடங்களில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 டன் கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.2 கோடி கடல் அட்டைகள் பறிமுதல்

அப்போது ஒருவரது வீட்டில் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3 டன் எடை கொண்ட கடல் அட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வீடு ராமதாஸ் என்பருக்கு சொந்தமானது என்பதும், காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கடல் அட்டைகளை கொண்டு வந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக தலைமறைவான வீட்டின் உரிமையாளர் ராமதாஸ் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகையில் 2-வது நாளாக கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com