

பனைக்குளம்
மன்னார் வளைகுடா கடல் பகுதியை சுற்றிலும் 21 தீவுகள் உள்ளன. இதில் பாம்பன் குந்துகால் அருகே குருசடை தீவு, சிங்கிலி தீவு மற்றும் மண்டபம் கடல் பகுதியில் மனோலி தீவு, முயல் தீவு ஆகிய தீவு பகுதிகள் உள்ளன. இந்த தீவு பகுதிகளை சுற்றிலும் டால்பின், கடல்பசு, கடல் அட்டை, பவளப் பாறைகள் உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
மேலும் இந்த வழியாக அவ்வப்போது கடத்தல்காரர்கள் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை படகு மூலமாக இலங்கைக்கு கடத்தி செல்வது நடைபெற்று வருகிறது.
கடல் அட்டைகள் கடத்தலை தடுப்பதில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டத்திலேயே முதல்முறையாக மண்டபம் காந்திநகர் அருகே உள்ள தெற்கு கடற்கரையில் மாவட்ட வனத்துறை சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் வனத்துறை சோதனைச்சாவடி புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:- மண்டபம்-பாம்பன் இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சிங்கிலிதீவு உள்பட 4 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை கண்காணிக்கும் வகையிலும், மண்டபம், பாம்பன் கடல் வழியாக நடைபெறும் கடல்அட்டை கடத்தலை தடுப்பதற்காக கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மண்டபம் காந்திநகர் அருகே தெற்கு கடற்கரையில் மாவட்ட வனஉயிரினஅதிகாரி உத்தரவின் பேரில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக வனத்துறை சோதனைச்சாவடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறந்து பயன் பாட்டுக்குவர உள்ளது. அதில் இரவு-பகலாக வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும் வனத்துறை ரோந்து பணிக்காக உள்ள பைபர் படகுகள் இந்த சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட உள்ளது. அதில் இருந்து வனத்துறையினர் இங்கிருந்தே தீவு பகுதிகளுக்கு ரோந்து சென்று வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.