கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று மந்திரி ஆர்.அசோக் கூறினார். வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதா அரசு எந்த நேரத்திலும் கவிழ்ந்துவிடும் என்று சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறி வருகிறார்கள். எக்காரணம் கொண்டும், சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு காங்கிரசாரால் இருக்க முடியவில்லை. அதனால் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள்.

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மீதான விசாரணையில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த விஷயத்தில் சிலர் உள்நோக்கத்துடன் பா.ஜனதாவை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். முன்பு எடியூரப்பா மீது பல்வேறு வழக்குகளை போட்டனர். அவர் சட்ட ரீதியாக அந்த வழக்குகளை எதிர்கொண்டார்.

டி.கே.சிவக்குமார் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றால், எடியூரப்பா மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் தொடர்பு உடையதா?. டி.கே.சிவக்குமார் மீது எந்த வழக்கிலும் தீர்ப்பு வரவில்லை. விசாரணை மட்டுமே நடக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்படக்கூடிய விசாரணை அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது அந்த அமைப்புகள் நடவடிக்கை எடுக்கிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதில் அரசியல் செய்வது சரியல்ல. வட கர்நாடகம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டான வெள்ளத்தால் சுமார் ரூ.38 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய குழுவினர் கர்நாடகம் வந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். அந்த குழுவினருக்கு கர்நாடக அதிகாரிகள் முழு விவரங்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வருகிற 7-ந் தேதி பெங்களூரு வருகிறார். அவரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி அதிக நிதி உதவியை முதல்-மந்திரி எடியூரப்பா கேட்கவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வீடுகள் இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டி கொடுத்தல், சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சம் கொடுத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com