மழைக்கால தொடருக்காக செப்டம்பர் 21-ந் தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

கர்நாடக சட்டசபை, மழைக்கால கூட்டத்தொடருக்காக செப்டம்பர் 21-ந் தேதி கூடுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மழைக்கால தொடருக்காக செப்டம்பர் 21-ந் தேதி கர்நாடக சட்டசபை கூடுகிறது மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
Published on

பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படவில்லை. அதே நேரத்தில் பெங்களூரு விதானசவுதாவில் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தினாலும், கொரோனா பரவல் இருப்பதால் சபையில் உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமருவதற்கான இடவசதிகள் போதுமானதாக இல்லை என்று சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி கூறினார்.

மேலும் வேறு பகுதியில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தும்படி சட்டசபை செயலாளர் விசாலாட்சிக்கு, சபாநாயகர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் பெங்களூருவை தவிர பிறபகுதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவதற்கான இடவசதிகள் இல்லை என்று சபாநாயகரிடம் சட்டசபை செயலாளர் அறிக்கை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனாலும் அடுத்த மாதம்(செப்டம்பர்) மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, சபாநாயகர் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, மழைக்கால கூட்டத்தொடரை எங்கு வைத்து நடத்தலாம் என்பது குறித்து அரசும் ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியலும் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 21-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை பெங்களூரு விதானசவுதாவில் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் மழைக்கால கூட்டத்தொடருக்காக சட்டசபையை கூட்டுவது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. செப்டம்பர் 23-ந் தேதி மழைக்கால கூட்டத்தொடரை தொடங்க முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் 21-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை 10 நாட்கள் மழைகால கூட்டத்தொடரை நடத்துவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பதால் உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதனால் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி மற்றும் கர்நாடக மேல்-சபை தலைவருடன் ஆலோசனை நடத்தப்படும்.

அவர்களது வழிகாட்டுதலின்படி மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போதும் கொரோனா பரவல் இருப்பதால், சமூக இடைவெளியை உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், அரண்மனை மைதானம் அல்லது வேறு பகுதியில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இறுதியில் பெங்களூரு விதானசவுதாவிலேயே கொரோனாவுக்காக முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு மழைக்கால கூட்டத்தொடரை நடத்தலாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com