பேரணாம்பட்டு அருகே வனப்பகுதி தடுப்பணையை வேலூர் கலெக்டர் ஆய்வு

பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் உள்ள தடுப்பணையை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேரணாம்பட்டு அருகே வனப்பகுதி தடுப்பணையை வேலூர் கலெக்டர் ஆய்வு
Published on

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே சிந்தகணவாய் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இந்தத் தடுப்பணைக்கு சாத்கர் அல்லேரி மலையில் இருந்து நீர்வரத்து வருகிறது. கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணையை தமிழ்நாடு காடு வளர்ப்புத்திட்டத்தின் மூலம் வனத்துறையினர் புதுப்பித்தனர். ஆனால் போதிய நிதி இல்லாததால் பணி பாதியில் நின்று போனது.

இதனால் சிந்தகணவாய் கிராம வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரிக்கு தண்ணீர் வருவது நின்றதால், அப்பகுதி விவசாயிகள் தங்கள் பங்களிப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தி சிந்தகணவாய் கிராம வனப்பகுதியில் இருந்து கவுராப்பேட்டையில் உள்ள ஜாப்ராபாத் ஏரிக்கு வரும் 2 கிலோ மீட்டர் தூர கால்வாயில் நீர்வரத்துப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது 2 கிலோ மீட்டர் தூர கால்வாய் தூர்ந்து போய் உள்ளது.

கால்வாய், வனப்பகுதியில் அமைந்திருப்பதால் வனத்துறையினர் கால்வாயை தூர் வார அனுமதிக்கவில்லை. கடந்தசில நாட்களாக பெய்து வரும் மழையால் தடுப்பணை பகுதிக்கு தொடர்ந்து 2 மாதங்களாக நீர் வரத்து அதிகரித்ததால் தண்ணீர் வீணாகி செல்வதால் கவுராப்பேட்டை ஏரிக்கு நீரை திருப்பினால் சுற்று வட்டாரத்தில் 20-க்கு மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறை தீரும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.

எனவே கால்வாயை தூர் வார அனுமதி வழங்க இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வேலூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேரணாம்பட்டு அருகே சிந்தகணவாய் கிராம வனப்பகுதிக்கு வந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வன அதிகாரி பார்கவதேஜா, குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக் மன்சூர், பேரணாம்பட்டு தாசில்தார் கோபி, ஒன்றிய ஆணையாளர் சுதாகரன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com