

கூடலூர்,
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனப்பகுதியில் கடந்த 19-ந் தேதி சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் புலி சுருக்கு கம்பியில் சிக்கி இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதுமலை ஊராட்சி நாகம்பள்ளி, முதுகுளி, புலியாளம், மண்டக்கரா உள்பட பல குக்கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை நேற்று காலை 11 மணிக்கு முற்றுகையிட்டனர்.
பின்னர் சுருக்கு கம்பியில் சிக்கி புலி இறந்த விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் வனத்துறையினர் இரவு, பகல் பாராமல் தொந்தரவு செய்து வருகின்றனர். மேலும் உண்மையான குற்றவாளி கள் கிடைக்காத பட்சத்தில் நிரபராதிகள் பலரை பிடித்து சென்று பொய் வழக்கு போட முயற்சி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கிராம மக்களையும் வனத்துறையினர் மிரட்டி வருகின்றனர் என பல்வேறு புகார்களை கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது.
பின்னர் முதுமலை மக்கள் மறுவாழ்வு சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் திராவிடமணி எம்.எல்.ஏ. உள்பட கிராம மக்கள் பலர் ஆர்.டி.ஓ. முருகையனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளதாவது:-
முதுமலை ஊராட்சியில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன் செட்டி சமூக மக்கள் மட்டுமே வசித்து வருகிறோம். விவசாயம், கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 2007-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு புலிகள் காப்பக வனத்தில் உள்ள எங்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் சன்னக்கொல்லி பகுதியில் இடம் ஒதுக்கியும் அதற்கான பணிகள் முடிவடையவில்லை. இதன் காரணமாக வனங்கள், வனவிலங்குகளுக்கு மத்தியில் பல்வேறு போராட்டங்களுடன் வாழ்ந்து வருகிறோம்.
இந்த நிலையில் முதுமலையில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி இறந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை வனத்துறையினரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் கிராமங்களுக்குள் இரவு பகல் பாராமல் வனத்துறையினர் வந்து விசாரணை என்ற பெயரில பெண்கள், குழந்தைகள், விவசாயிகளை மிரட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சதிஷ் என்ற வாலிபரை சிறுத்தைப்புலி தாக்கியது. இது சம்பந்தமாக பலமுறை வனத்துறையிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புலி இறந்த வழக்கில் இப் பகுதி மக்கள் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் தேவை இல்லாமல் வீடு வீடாக சென்று மிரட்டுவதால் எங்களது நிம்மதியை இழந்து விட்டோம். எனவே வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எங்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதே போல் ஐகோர்ட்டு ஆணையின்படி எங்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தை விரைவாக செயல் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்பதாக உறுதி அளித்தார்.
இதேபோல் முதுமலை மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண கோரி திராவிடமணி எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. விடம் வலியுறுத்தினார். அப்போது வக்கீல்கள் பரசுராமன், சுகுமாறன், பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திரன், சிவக்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுகுமாறன், முதுமலை மக்கள் மறுவாழ்வு சங்க செயலாளர் சுரேஷ் உள்பட கிராம மக்கள் உடன் இருந்தனர்.