தஞ்சையில் முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டம் மூடப்பட்ட அங்காடியை திறக்க கோரிக்கை

தஞ்சையில் மூடப்பட்ட அங்காடியை திறக்க கோரி முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சையில் முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டம் மூடப்பட்ட அங்காடியை திறக்க கோரிக்கை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான அங்காடி கடந்த 5ந் தேதி திடீரென மூடப்பட்டது. சுழற்சி முறையில் பணியாளர்கள் இடமாறுதல் மற்றும் பொருட்களின் இருப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் அடுத்தமாதம்(நவம்பர்) 1ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக லாபகரமாக இயங்கி வரும் இந்த அங்காடியை உடனே திறக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்காடி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சி.டி.அரசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அனந்தவேலு, இணை செயலாளர்கள் புஷ்பராஜ், இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் நிர்வாகிகள் பாட்ஷா, செரீப், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் இவர்கள் அனைவரும் அங்காடி வளாகத்திற்குள் சென்றனர். அப்போது அனைவரும் வெளியே செல்லுங்கள். அங்காடி நுழைவு வாயில் கதவை பூட்டப்போவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் படைவீரர்கள், நாங்கள் இங்கே தான் இருப்போம். எங்களை யாரும் வெளியே போக சொல்ல முடியாது என்று கூறினர்.

இதையடுத்து நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து வந்தனர். நாற்காலிகளை வளாகத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது என்று போலீசார் தடுத்தனர். நாங்கள் அமைதியான முறையில் போராட இருக்கிறோம் என்று கூறி நாற்காலிகளை வளாகத்திற்குள் போட்டு அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். பிற்பகல் 1 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


முன்னதாக முன்னாள் படைவீரர்கள் சங்க தலைவர் சி.டி.அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

12 ஆண்டுகளுக்கு மேலாக லாபகரமாக இயங்கி வந்த அங்காடியை நஷ்டத்தில் இயங்குவதாக பொய்யான காரணத்தை கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மூட முயற்சி செய்தனர். தற்போது தற்காலிகமாக மூடியிருப்பதாக அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனால் இது நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையாகும்.

போலியான ரசீது மூலம் பொருட்களை வெளியே விற்று மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பாதித்து, மேல்அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கின்றனர். எல்லா அங்காடியிலும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. தஞ்சையில் மட்டும் தான் குறைந்த அளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது. தற்போது லஞ்சம் கொடுக்காத காரணத்தினால் அங்காடியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் 3,800 முன்னாள் படைவீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்காடியை திறக்கும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com