உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்

மினிலாரி மோதியதில் காயமடைந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்ட கலெக்டர், தனது காரில் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விழுப்புரம் அருகே நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கலெக்டர்
Published on

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 23-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு வருவாய் தீர்வாய அலுவலரான மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.இந்த நிலையில் மேல்மலையனூரில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியை முடித்துவிட்டு கலெக்டர் சுப்பிரமணியன் மதியம் 2.30 மணி அளவில் அங்கிருந்து காரில் விழுப்புரத்துக்கு புறப்பட்டார்.

இந்த கார் மாலை 3.30 மணியளவில் விழுப்புரம் அருகே தும்பூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது கலெக்டரின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று, அங்கு சாலையோரமாக நடந்து சென்ற விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி அழகம்மாள் (வயது 67) என்பவர் மீது மோதியது. இதில் அந்த மூதாட்டி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர் சுப்பிரமணியன், உடனே தனது காரை நிறுத்துமாறு கூறினார். அதன்படி டிரைவர் காரை நிறுத்தினார்.

பின்னர் காரில் இருந்து கீழே இறங்கிய அவர், அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த மூதாட்டியை மீட்டு தனது காரிலேயே ஏற்றி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த மூதாட்டியுடன் அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் சென்றார். தொடர்ந்து, கலெக்டர் சுப்பிரமணியன், தனது செல்போன் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் புகழேந்தியை தொடர்பு கொண்டு மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றும்படி அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், மேல்மலையனூர் ஜமாபந்தி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவகுருவின் காரில் கலெக்டர் சுப்பிரமணியன் ஏறி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார். விபத்தில் காயமடைந்த மூதாட்டியை உடனடியாக தன்னுடைய காரில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த கலெக்டரின் இந்த மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com