

காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பள்ளப்பட்டியில் பிரசித்தி பெற்ற அய்யனார் அரியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்படும். சுப்ரீம் கோர்ட்டு தடையால் சில ஆண்டுகளாக இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்தநிலையில், அய்யனார் அரியசுவாமி கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த கிராம கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவை அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்தகொண்டு, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் தப்பிச் சென்றன.
முடிவில் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், மின்விசிறி, மிக்சி, குக்கர், வெள்ளி நாணயம், சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
4 பேர் படுகாயம்
காலை 9 மணிக்கு மேல் தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.
இந்த போட்டியை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர்.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் அலெக்சாண்டர்(வயது 23), பச்சமால்(57), வினோத், முத்துக்குமார் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக நரிக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.