

ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ்.எஸ். கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் பாலாஜி (வயது 25). இவர், வடக்கு பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மது விற்கப்படுவதாக, ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 9 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 பேர் கைது
அதே பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ராமஜெயம்(50). இவரது கடையிலும் மது விற்றதாக கூறப்பகிறது. இவரது கடையில் சோதனை நடத்திய போலீசார், 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆறுமுகநேரி பி.எஸ். ராஜா நகர் பகுதியில் நடராஜன் மகன் குமாரதாஸ் என்பவர் சட்டவிரோதமாக மது விற்றதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 3 பேர் மீதும் ஆறுமுநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவில்பட்டி
இதேபோன்று, கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதபுரம் ரெயில்வே பாதை அருகே கோவில்பட்டி, காந்தாரி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (41) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 மது பாட்டில்களும் ரூ.400-ம் பறிமுதல் செய்யப்பட்டது.