பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் மனு அளித்தனர்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், காமராஜ், துரைசாமி, கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி ஊராட்சியில் மத்தியஅரசின் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்திலும் முறைகேடு நடைபெற்றதை கண்டித்தும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர்கள் சுப்பிரமணியன், கணேசன், ஞானசேகரன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் சிலர், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

வெண்டையம்பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம், குடிநீருக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தோம்.

இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணை செய்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் முறைகேடுகளை மறைக்கும் விதமாகவும், நீதிபதிகளின் உத்தரவை மீறும் வகையிலும் வீடு கட்டாமல் ரசீது பெற்று கொண்டவர்களுக்கு வீடு கட்டும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையில் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். தவறை மறைக்கும் நோக்கிலும், நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com