மாவட்ட கலெக்டரிடம், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு

மாவட்ட கலெக்டரிடம், இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.
மாவட்ட கலெக்டரிடம், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு
Published on

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மனு அளிக்க தேனி உழவர்சந்தைக்கு வெளியே சாலையோரம் கடைகள் அமைத்து காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் உழவர் சந்தைக்கு வெளியே தாலுகா அலுவலகம் செல்லும் சாலையோரம் கடைகள் அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்து வந்தோம். சமீபத்தில் உழவர் சந்தை அதிகாரி எங்கள் கடைகளை காலி செய்யச் சொன்னார். இதையடுத்து அங்கிருந்து கடைகளை காலி செய்து மீறுசமுத்திரம் கண்மாய் கரையோர சாலையில் கடைகள் நடத்தி வருகிறோம். அங்கு அசுத்தமான இடத்திலும், கழிப்பறை தொட்டியின் மேற்பகுதியில் கடைகள் அமைக்க வேண்டியது உள்ளது. இதனால், பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவது இல்லை. இதன் காரணமாக நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே, மீண்டும் பழைய இடத்திலேயே கடைகள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

ஆண்டிப்பட்டி தாலுகா கதிர்வேல்புரம் வேலப்பர்கோவில் அருகில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு அளித்த அந்த மக்கள் கூறுகையில், மலைகளில் சுற்றித் திரிந்த எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இலவச வீடு கட்டிக் கொடுத்தது. சுமார் 20 வீடுகள் இங்கு உள்ளன. ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இப்போது 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். வீடு இல்லாததால் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பத்தினர் வசிக்க வேண்டிய நிலைமை உள்ளது. எனவே வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அத்துடன், விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு எங்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்றனர்.

கண்டமனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கண்டமனூர் பஸ் நிலையம் அருகில் பாதையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பயணிகள் நிழற்குடையை அகற்றி கடைகள் கட்ட முயற்சி நடக்கிறது. எனவே ஆக்கிரமிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com