புரெவி புயல் காரணமாக தஞ்சையில் தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு

புரெவி புயல் காரணமாக தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.
புரெவி புயல் காரணமாக தஞ்சையில் தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகையொட்டி தொடர்ந்து சில நாட்கள் மழை நீடித்தது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

மேலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தஞ்சையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

அடியோடு பாதிப்பு

இந்த மழையினால் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் சாலைகளிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழையினால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு பாதிக்கப்பட்டது. மேலும் இந்த மழையினால் சாலையோரம் போடப்பட்டு இருந்த தரைக்கடைகளும் நேற்று போடப்படவில்லை. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் காந்திஜி சாலை, தெற்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு அலங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்பட்டது. இதே போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெண்ணாற்றில் நிறுத்தம்

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. வெண்ணாற்றில் நேற்று முன்தினம் வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல் கல்லணைக்கால்வாயில் 1,500 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் 501 கன அடியாக குறைக்கப்பட்டது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் ஏற்கனவே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அய்யம்பேட்டை 6, மஞ்சளாறு 3, பட்டுக்கோட்டை 3, திருவிடைமருதூர் 2, நெய்வாசல் தென்பாதி 2, கும்பகோணம் 2, பாபநாசம் 1, திருக்காட்டுப்பள்ளி 1, ஒரத்தநாடு 1, அணைக்கரை 1, அதிராம்பட்டினம் 1, மதுக்கூர் 1, பேராவூரணி 1.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com