விருத்தாசலத்தில் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரம் அபேஸ் - போலீசார் விசாரணை

விருத்தாசலத்தில் செல்போனில் பேசி ஜவுளி வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம மனிதர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருத்தாசலத்தில் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரம் அபேஸ் - போலீசார் விசாரணை
Published on

விருத்தசாலம்,

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 68). ஜவுளி வியாபாரியான இவர் விருத்தாசலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் பணம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தியாகராஜனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களது வங்கி கணக்கை மேம்படுத்த வேண்டும். எனவே உங்கள் போனில் வரும் ரகசிய குறியீடு எண்ணை எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய தியாகராஜன் தனது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வந்த ரகசிய குறியீட்டு எண்ணை மர்மநபரிடம் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

பின்னர் சில நிமிடம் கழித்து தியாகராஜனின் செல்போனில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரம் எடுக்கப்பட்டதுபோல் குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தியாகாராஜன் உடனடியாக வங்கிக்கு விரைந்து சென்று வங்கி ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். ஆனால் வங்கி ஊழியர்களோ நாங்கள் யாரும் வாடிக்கையாளர்களிடம் போனில் தகவல்களை கேட்பது கிடையாது. தேவைப்பட்டால் நேரில் வரவழைத்து தான் தகவல்களை கேட்போம் என்றனர்.

இதன் பிறகே வியாபாரியின் வங்கி கணக்கு எண் மற்றும் அதில் உள்ள தொகையை நோட்டமிட்டு, அதிகாரி போல பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com