

மும்பை,
நவிமும்பையில் பேலாப்பூர் ரெயில் நிலையம்- நவிமும்பை சர்வதேச விமான நிலையம் வரையிலும் 4 கட்டமாக மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டமாக பேலாப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பெந்தர் பகுதி வரை 11.10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் நிலையங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ரூ.3 ஆயிரத்து 63 கோடி செலவில் செயல்படுத்தப்படும் நவிமும்பை முதல் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடம் அடுத்த ஆண்டு (2020) பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், நவிமும்பையில் இயக்குவதற்காக 2 மெட்ரோ ரெயில்கள் சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த மெட்ரோ ரெயில் பெட்டிகள் கப்பலில் கொண்டு வரப்பட்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பணிகள் முடிந்ததும் விரைவில் அந்த மெட்ரோ ரெயில்கள் சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தப்படும்.
இந்த சோதனை ஓட்டம் சில மாதங்கள் நடத்தப்படும். அதன்பின்னர் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனரிடம் அனுமதி பெறப்படும் என நவிமும்பை மெட்ரோ ரெயில் கழக அதிகாரி ஒருவர் கூறினார்.