மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதிய நடைமுறை மூலம் எளிதாக மாற்றலாம்; சிவகங்கை மாவட்ட கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதிய நடைமுறை மூலம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி
Published on

வேலைவாய்ப்பு அலுவலகம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கல்வித்தகுதியை பதிவு செய்தால் அரசு துறைகளில் பதிவுமூப்பு அடிப்படையில் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புக்கு பரிந்துரைக்கப்படும். இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன. அதேபோல, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் என்ஜினீயரிங், டாக்டர், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை பதிவு செய்ய சென்னை மற்றும் மதுரையில் தொழில் மற்றும் செயல்வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்படுகிறது.

இந்த நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பதிவு மூப்பு பாதிக்கப்படாமல் மாற்றுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன.

இதற்கிடையே, ஒரு மாவட்டத்தில் இருந்து வேறொரு மாவட்டத்திற்கு பதிவை மாற்றும் விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய உத்தரவு

அதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுபவர்கள் வேலை வாய்ப்பு பதிவை மாற்றி கொள்ள புதிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுபவர்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மாற்றி கொள்வதில் இருந்த சிரமங்களை தொடர்ந்து அரசு அதை எளிமையாக்கி தற்போது ஆணை பிறப்பித்துள்ளது.

இதன்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை மாவட்டம் விட்டு மாவட்டம் பதிவு மாற்றம் செய்வதற்கு தங்களது விண்ணப்ப மனுவுடன் மனுதாரர்களால் சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை தேவைப்படும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com