கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.
கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு
Published on

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீர் கல்வராயன்மலை பகுதியான பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைபாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வரும்.

46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக அக்டோபர் முதல் வாரத்தில் திறக்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.

இதற்கிடையே கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவான 44 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 17-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் புதிய பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது கடந்த 21-ந் தேதி நிறுத்தப்பட்டது.

இதனிடையே சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அவர்கள் சம்பா பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கோமுகி அணையில் இருந்து அக்டோபர் 1-ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, முன்னாள் அமைச்சர் பா.மோகன், சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து விட்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, விவசாய சங்க தலைவர் திருநாராயணன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக்குழு துணை தலைவர் பாபு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், வடக்குநந்தல் நகர செயலாளர் கருப்பன், பாசறை நிர்வாகிகள் அருள்மணி, தேசிங்கு ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா, எடுத்தவாய்நத்தம் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், எடுத்தவாய்நத்தம் அருள், கரடிசித்தூர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்காக புதிய வாய்க்காலில் வினாடிக்கு 50 கன அடியும், பழைய வாய்க்காலில் வினாடிக்கு 60 கன அடி தண்ணீரும் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு பழைய வாய்க்காலில் வினாடிக்கு 120 கன அடியும், புதிய வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடியும் திறக்கப்படவுள்ளது. சம்பா பயிருக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த அளவில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது என்றனர்.

கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com