வைகை அணையில் இருந்து, முதல்போக பாசனத்திற்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்க வாய்ப்பு

வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டி உள்ளதால் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் முதல் வாரம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
வைகை அணையில் இருந்து, முதல்போக பாசனத்திற்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்க வாய்ப்பு
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டத்தில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து 60 அடிக்கும் மேல் நிரம்பி காட்சியளிக்கிறது.

வைகை அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் போதுமான அளவில் நீர்இருப்பு இல்லாததால் கடந்த 12 ஆண்டுகளாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடைசியாக 2008-ம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறக்க வாய்ப்பு

இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டி உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தண்ணீர் திறக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

இதன்படி வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் 120 நாட்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45 ஆயிரம் ஏக்கர்

இந்த தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்றுக்காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 64.83 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 968 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்தம் 4 ஆயிரத்து 593 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com