முழு அடைப்பு போராட்டம்: கடலூர் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ், ஆட்டோக்கள் ஓடாது

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம்: கடலூர் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ், ஆட்டோக்கள் ஓடாது
Published on

கடலூர்,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து இன்று(திங்கட்கிழமை) நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று(திங்கட்கிழமை) தனியார் பஸ்கள் ஓடாது என மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் மகேஷ் தெரிவித்தார். இதேபோல் கடலுரில் ஆட்டோக்களும் ஓடாது என்று ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் நகர காங்கிரஸ் தலைவர் வேலுசாமி தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் துண்டு பிரசுரங்களை வழங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், ராஜேஷ், காமராஜ், மார்க்கெட் மணி, நகர செயலாளர்கள் கோபால், சங்கர், மாரி, தண்டபாணி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், மோடி அரசு கடைபிடித்து வரும் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

இதை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிபெற செய்ய அனைத்து பகுதி மக்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மேலும் கடலூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள வட்ட தலைநகரம் மற்றும் முக்கிய நகரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை மறுநாள்(புதன்கிழமை) சுபமுகூர்த்த தினம், அதை தொடர்ந்து மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா வர இருப்பதால் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் பொதுமக்களுக்கு சிரமத்தை அளிக்கும். எனவே வணிகர்களை கடையை அடைக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். வரும் நாட்களில் இதுபோன்ற நிலையை தவிர்க்க வணிகர்களை கலந்து ஆலோசித்து அரசியல் கட்சியினர் போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com