

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட தஞ்சை ஒன்றியம், ஒரத்தநாடு ஒன்றியம், திருவோணம் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று அவர் ஒரத்தநாடு பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒரத்தநாடு பேரூராட்சியில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கொண்டு வந்துள்ளேன். அனைத்து தெருக்களில் தரமான தார்சாலைகள், சிமெண்டு சாலைகள் போடப்பட்டுள்ளன. குடிசை வாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுத்துள்ளேன்.
நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. உயர்கோபுர மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. பள்ளிவாசல் குளம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரிய அடுப்பு வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 மானியமாக வழங்கப்படும். குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங்மெஷின் வழங்கப்படும்.
திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை மணமக்களுக்கு அழகிய பட்டாடை, வெள்ளி கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய அம்மா சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும்.
நான் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக இருந்தால் காலத்தில் 75 ஆண்டுகளில் பெறாத வளர்ச்சியை ஒரத்தநாடு தொகுதி அடைந்தது. கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் பின்தங்கி உள்ளது. எனவே ஒரத்தநாடு தொகுதி மேலும் வளர்ச்சி அடைய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.