கன்னியாகுமரியில் காந்தி, காமராஜர் மண்டபங்கள் ரூ.40½ லட்சத்தில் சீரமைக்கப்படும் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்

கன்னியாகுமரியில் காந்தி, காமராஜர் மண்டபங்கள் ரூ.40½ லட்சத்தில் சீரமைக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
கன்னியாகுமரியில் காந்தி, காமராஜர் மண்டபங்கள் ரூ.40½ லட்சத்தில் சீரமைக்கப்படும் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
Published on

கன்னியாகுமரி,

மகாத்மா காந்தி நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி அஸ்தி கட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கும், அஸ்தி கட்டத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த மண்டபம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே மண்டபத்தை சீரமைக்க அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இதேபோன்று இங்குள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் சீரமைக்க ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும்.

இரவு 9 மணி வரை

காந்தி நினைவு மண்டபம் தற்போது இரவு 7 மணி வரை திறந்து வைக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக இரவு 9 மணி வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த மண்டபத்தை பயணிகள் இரவிலும் பார்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காந்தி மண்டபத்தில் நேற்று மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் ராட்டையில் நூல் நூற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், நகர அ.தி.மு.க. செயலாளர் வின்ஸ்டன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெஸிம், யூனியன் கவுன்சிலர் ராஜேஷ், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com