இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதால் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

கவுரி லங்கேசை பணத்திற்காக கொல்லவில்லை என்றும், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதால் கொலை செய்யப்பட்டதாகவும் பரசுராம் வாக்மோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதால் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டார்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
Published on

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ், கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் 5-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் நவீன்குமார், பரசுராம் வாக்மோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பரசுராம் வாக்மோர் தான், கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், கவுரி லங்கேசை கொலை செய்ய பரசுராம் வாக்மோருக்கு ரூ.13 ஆயிரம் கொடுக்கப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கவுரி லங்கேசை கொலை செய்ய திட்டமிட்டு முதலில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பெங்களூருவுக்கு பரசுராம் வாக்மோர் வந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்து ஒருவர் ரூ.3 ஆயிரம் கொடுத்திருந்தார். அதன்பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கவுரி லங்கேசை கொலை செய்த பின்பு, பரசுராம் வாக்மோரை வேறு ஒருவர் சந்தித்து ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். அப்போது அவரிடம், கவுரி லங்கேசை பணத்திற்காக கொலை செய்யவில்லை என்றும், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்ட காரணங்களுக்காக மட்டுமே கொலை செய்திருப்பதாகவும் பரசுராம் தெரிவித்தார்.

ஆனால் பணம் கொடுத்த 2 நபர்கள் பற்றிய பெயர், விவரம் எதுவும் தெரியாது என்று விசாரணையின் போது அவர் கூறினார். கவுரி லங்கேசை கொலை செய்துவிட்டு, ரூ.10 ஆயிரத்துடன் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் உள்ள தனது கிராமத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்கு தன் மீது எந்த விதமான சந்தேகமும் வராதபடி பரசுராம் வாக்மோர் நடந்து கொண்டுள்ளார். மேலும் எந்த ஒரு வேலைக்கும் செல்லவில்லை. சில இந்து அமைப்புகள் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். பரசுராம் வாக்மோருக்கு பணம் கொடுத்த நபர்கள் யார்? என்பது குறித்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், கவுரி லங்கேஷ், எழுத்தாளர் எம்.எம்.கலபுரகி மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே ஆகியோரை சுட்டுக் கொல்ல பயன்படுத்தியது ஒரே துப்பாக்கி தான் என்று தடயவியல் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்து உள்ளது. அதனால் எம்.எம்.கலபுரகி, கோவிந்த் பன்சாரே கொலை வழக்குகளிலும், பரசுராம் வாக்மோருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கோவிந்த் பன்சாரே கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காகவும், சில தகவல்களை பெறுவதற்காகவும் மராட்டிய சிறப்பு விசாரணை குழு போலீசார் பெங்களூருவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் மராட்டிய போலீசார் பெங்களூருவுக்கு வருவது பற்றியோ, மேலும் கோவிந்த் பன்சாரே கொலை குறித்தோ தங்களிடம் தொடர்பு கொள்ளவில்லை என்று பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com