குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:- தேக்கம்பட்டி ஊராட்சி, தாத்தையங்கார்பட்டி கிராம எல்லை அருகே செட்டிச்சாவடியின் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது.

இங்கு மாநகராட்சி முழுவதில் இருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தினமும் சுமார் 500 டன் வரையிலான குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக்கிடங்கு அமைந்துள்ள நிலப்பகுதியானது இதற்கு முன்பு மேக்னசைட் சுரங்கம் அமைந்திருந்த பகுதியாகும். மேலும் இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு வெடி வெடிப்பதன் மூலம் குப்பைகிடங்கு அமைந்துள்ள நிலப்பகுதி மிகவும் தளர்ந்துள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீருடன் குப்பை மாசுகள் கலந்து வருகிறது.

இதையொட்டி எங்கள் பகுதிகளில் குடிநீருக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர் மாசடைந்து காணப்படுகிறது. தினமும் குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல், சுவாச பிரச்சினைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அசுத்தமான குடிநீரை குடிப்பதாலும், மாசடைந்த காற்றை சுவாசிப்பதாலும் புற்றுநோய் மற்றும் கடுமையான சுவாச பிரச்சினையால் பாதிக்கப்படுகிறோம். ஈக்கள் மற்றும் பூச்சி தொல்லையும் அதிகரித்து வருகிறது. குப்பைக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என மாநகராட்சி பிரித்து கொட்டுவதில்லை. மேலும் இங்கு நிலத்தடி நீரை கெடுக்காத வகையில் எந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யப்படவில்லை. இதை சரிசெய்யக்கோரி 4 முறை தேக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை மூலமாக தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாரும் தெரிவித்து இருக்கிறோம்.

எனவே தளர்வான இந்த இடத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு செயல்படுவதை உடனடியாக அகற்றி, குப்பைகள் கொட்டுவது மற்றும் தீ வைத்து எரிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். மருத்துவ கழிவுகளை கொட்டவோ, எரிக்கவோ கூடாது. பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்பட்ட குப்பைகளை வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com