அரசு ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்: உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் கலெக்டர் பேச்சு

உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று அரசு ஊழியர்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் கந்தசாமி பேசினார்.
அரசு ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்: உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் கலெக்டர் பேச்சு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை மூலம் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்து மருத்துவ சிகிச்சை செய்து கொண்டார். முன்னதாக அவர் பேசியதாவது:-

ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், சர்வேயர் நிலையில் பணியாற்றி வந்த 3 பேர் தேர்தல் நேரத்தில் மரணம் அடைந்தனர். இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை பார்க்கும் போது மிகவும் கடினமாக இருந்தது.

அரசு ஊழியர்களுக்கு குடும்பம், வேலை என பல்வேறு பிரச்சினைகள் வாழ்க்கையில் உள்ளது. வேலை கிடைப்பதற்கு முன்பு வேலையில் சேருவது மட்டும் தான் பிரச்சினையாக இருந்தது.

ஆனால் வேலையில் சேர்ந்த பிறகு குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், பணிபுரியும் இடம் என பல்வேறு பிரச்சினைகள் தினந்தோறும் வருகிறது. இந்த நேரத்தில் தான் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பார்க்காமல் விடுகிறோம்.

இதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு உடல் பரிசோதனை மேற்கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சிகிச்சை நடைபெற்றது. இதில் ரத்த அழுத்தம், இ.சி.ஜி., கர்ப்பபை மற்றும் மார்பக புற்றுநோய், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com