தூத்துக்குடி: அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 211 பேர் கைது

தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 211 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி: அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 211 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். அரசு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

சாலைமறியல்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தமிழரசன், துணை தலைவர்கள் ஞானராஜ், அன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

211 பேர் கைது

தொடர்ந்து பாளையங்கோட்டை ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 211 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், பொன்னரசு மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com