

பெரம்பலூர்:
நஷ்டஈடு வழங்க உத்தரவு
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, மா.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 35). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மணிமாறன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ரூ.18 லட்சத்து 84 ஆயிரத்து 400-ஐ நஷ்டஈடாக மணிமாறன் குடும்பத்தினருக்கு வழங்க சென்னை மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் மணிமாறன் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
அரசு பஸ் ஜப்தி
இதனால் தற்போது வட்டியுடன் ரூ.28 லட்சத்து ஆயிரத்து 612 நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த நஷ்டஈடு தொகையையும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் சென்னை மண்டல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று திருச்சியில் இருந்து பயணிகளுடன் சென்னை நோக்கி பெரம்பலூர் நான்கு ரோடு வழியாக வந்த அரசு விரைவு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். அதில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து ஜப்தி செய்யப்பட்ட பஸ், பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.