

வேலூர்,
வேலூரை அடுத்த மாதனூர் அனங்காநல்லூர் ஊராட்சி வாத்தியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (47). இவர்களுக்கு ஸ்ரீதர் (30), ஸ்ரீகாந்த் (27), ஹேமானந்த் (25) என 3 மகன்களும், சர்மிளா (24) என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் ஸ்ரீதர் (30), பி.காம். முடித்துவிட்டு மாதனூர் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். ஸ்ரீதருக்கு திருமணமாகவில்லை.
இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இரவு ஓட்டலை மூடிவிட்டு, ஸ்ரீதர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாதனூர் - ஒடுகத்தூர் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது இவருடைய மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஸ்ரீதரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், நேற்று காலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனையடுத்து ஸ்ரீதரின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு ஒரு சிறுநீரகம், கல்லீரலும், சென்னை குளோபல் ஆஸ்பத்திரிக்கு இதயமும், சென்னை போர்ட்டிஸ் மலர் ஆஸ்பத்திரிக்கு நுரையீரலும், மியாட் ஆஸ்பத்திரிக்கு மற்றொரு சிறுநீரகமும் தானமாக பெறப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள 3 ஆஸ்பத்திரிகளுக்கும் உடல் உறுப்புகளை சாலை மார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக சென்னை குளோபல், போர்ட்டிஸ் மலர் ஆஸ்பத்திரி ஆம்புலன்சுகள் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்தன.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலால் காலதாமதமாவதை தடுக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்லவும், ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதற்காக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து புதிய பஸ் நிலையம், காட்பாடி வழியாக வி.ஐ.டி. வரை போக்குவரத்து நெரிசலை போலீசார் குறைத்து ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல வழிவகை செய்திருந்தனர். சி.எம்.சி.க்கு பெறப்பட்ட உடல் உறுப்புகளை தவிர்த்து, ஏனைய இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பிற்பகல் 3.12 மணி அளவில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் முன்னால் செல்ல, ஆம்புலன்ஸ் வி.ஐ.டி.க்கு சென்றது. இதையடுத்து இதயம் உள்ளிட்ட உறுப்புகளை ஹெலிகாப்டரில் 3.28 மணிக்கு ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீதரின் சகோதரர் ஸ்ரீகாந்த் கூறுகையில், எனது சகோதரர் உடல் உறுப்புகளை தானம் செய்ததால் அவர் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறார். அவர் மறைந்த பின்னும் பலருக்கு வாழ்க்கை தந்துள்ளார். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் இன்னும் இவ்வுலகில் துடித்துக் கொண்டிருக்கிறது என்றார்.