பெற்றோரை இழந்து வறுமையில் தவிக்கும் 3 சகோதரிகளுக்கு பசுமை வீடு - கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்

வந்தவாசி அருகே பெற்றோரை இழந்து வறுமையில் தவித்த 3 சகோதரிகளுக்கு பசுமை வீடு கட்டித்தர உத்தரவிட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் அவர்களது கிராமத்துக்கு வந்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பெற்றோரை இழந்து வறுமையில் தவிக்கும் 3 சகோதரிகளுக்கு பசுமை வீடு - கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்
Published on

வந்தவாசி,

வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மொளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் லாரி டிரைவராக வேலைபார்த்தார். இவருடைய மனைவி குமாரி. இவர்களுக்கு மணிமேகலை (வயது 26), புனிதவதி (23), கோமதி (21) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு மனோகரன் விபத்து ஒன்றில் இறந்து போனார், இதன் பின் உடல்நலம் குன்றிய அவரது மனைவி குமாரியும் சில மாதங்களில் இறந்து போனார்.

பெற்றோரை இழந்ததால் மணிமேகலை உள்பட 3 பேரும் 2 பாட்டிகளின் அரவணைப்பில் சித்தப்பா வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் மணிமேகலை உடல்நலம் சரியில்லாததால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புனிதவதி வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. கோமதி செய்யாற்றில் உள்ள கலைக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

இந்த நிலையில் தங்களுக்கு பசுமை வீடு வழங்கக் கோரி 3 பேரும் கடந்த 1-ந் தேதி திருவண்ணாமலைக்குச் சென்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வழங்கிய அறிக்கையை கருத்தில் கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, 3 பேரின் ஏழ்மை நிலையை போக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 10ஆயிரம் மதிப்பில் பசுமை வீடு வழங்கவும், அந்த வீட்டை உடனடியாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளே கட்டித் தரவும் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று மொளப்பட்டு கிராமத்திற்கு சென்ற கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, பசுமை வீடு கட்டும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் வாழ்வாதாரத்திற்காக மணிமேகலைக்கு களப்பணி பகுதி வழி நடத்துனர் பொறுப்பை வழங்கியதுடன், புதிய இருசக்கர வாகனம் ஒன்றையும் அவரிடம் வழங்கினார்.

முன்னதாக வந்தவாசி அருகே உள்ள தென்னாங்கூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழக கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் ஒருநாள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் வந்தவாசி 18-வது வார்டில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியின்போது பயிற்சி கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இணை இயக்குனர் பி.ஜெயசுதா, வந்தவாசி தாசில்தார் அரிக்குமார், தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ச.மோகன், ந.ராஜன்பாபு, ஒன்றிய பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உள்பட பலரும் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com