புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓடிய தனியார் பஸ்சுக்கு ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என அபராதம் விதித்த குன்னம் போலீசார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓடிய தனியார் பஸ்சுக்கு ‘சீட் பெல்ட்‘ அணியவில்லை என குன்னம் போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓடிய தனியார் பஸ்சுக்கு ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என அபராதம் விதித்த குன்னம் போலீசார்
Published on

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கமலசேகர். இவர் சொந்தமாக பஸ் வைத்துள்ளார். அந்த பஸ் திருச்சியில் இருந்து துவாக்குடி வழியாக புதுக்கோட்டைக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்சை ஓட்டும் டிரைவரின் செல்போனுக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஒரு இணையதளத்தில் இருந்து குறுந்தகவல் வந்தது.

அதில், அந்த பஸ்சில் கடந்த 28-ந் தேதி இரவு 7.22 மணிக்கு டிரைவர் சீட் பெல்ட் அணியவில்லை எனவும், அதிக பாரம் ஏற்றி சென்றதாகவும், அதற்காக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும், குறிப்பிடப்பட்டு இருந்தது.

அபராதம்

ஆனால் அந்த பஸ் 28-ந் தேதி இரவு 7.22 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இயங்கிய நிலையில், குன்னம் போலீசார் வழக்குப்பதிந்து அபராதம் விதித்துள்ளதாக தகவல் வந்துள்ளதே என அதிர்ச்சியடைந்த டிரைவர், இது பற்றி பஸ் உரிமையாளர் கமலசேகரிடம் தெரிவித்தார். இதையடுத்து கமலசேகர், தனது நண்பரான போலீஸ்காரர் ஒருவர் மூலம், குன்னம் போலீசாருக்கு மேற்கண்ட தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் நேற்று கமலசேகரை தொடர்பு கொண்டு, விவரம் கேட்டறிந்து, தவறுதலாக அவ்வாறு நடந்திருக்கலாம் என்றும், அது தொடர்பாக விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கூறுகையில், சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அபராதம் விதிப்பது வழக்கம். அதன்படி ஒரு வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டபோது, வாகன எண் தவறுதலாக பதிவாகி, தனியார் பஸ் டிரைவரின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றிருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com