புதுவை கால்நடை துறை இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய பெண் டாக்டரின் கணவருக்கு நெருக்கடி, சமூக வலைதளங்களில் வெளியான மற்றொரு பரபரப்பு ஆடியோ

புதுவை கால்நடை துறை இயக்குனர் மீது புகார் தெரிவித்த பெண் டாக்டரின் கணவருக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் மற்றொரு ஆடியோ வெளியாகி உள்ளது.
புதுவை கால்நடை துறை இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய பெண் டாக்டரின் கணவருக்கு நெருக்கடி, சமூக வலைதளங்களில் வெளியான மற்றொரு பரபரப்பு ஆடியோ
Published on

புதுச்சேரி,

புதுவை அரசு கால்நடை துறை அதிகாரி பத்மநாபன் மீதான பாலியல் புகார் பூதாகரமாக கிளம்பி உள்ளது. அவர் மீது பெண் டாக்டர் ஒருவர் எழுத்து பூர்வமாக அளித்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட அளவிலான உள்ளூர் புகார் குழு விசாரித்து வருகிறது.

இதனைதொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நடவடிக்கையின் பேரில் இயக்குனர் பணியில் இருந்து பத்மநாபன் நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாலியல் புகார் தெரிவித்த பெண் டாக்டரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கால்நடை துறை இயக்குனர் தரப்பில் இறங்கி உள்ளது.

இதற்காக தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தெரிகிறது. அதாவது பெண் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட பெண் டாக்டருக்கு புகாரை வாபஸ் பெறுவது குறித்து கடிதம் தயாரித்து அனுப்பி அதில் கையொப்பமிட்டு கவர்னரிடம் கொடுக்க வலியுறுத்தியதாகவும், வேறு சிலர் லட்சக்கணக்கில் பேரம் பேசி வருவதாகவும், சிலர் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற நெருக்கடி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் புகார் குழுவிடம் பெண் டாக்டர் புகார் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த பெண் டாக்டர் 3 மாத விடுப்பில் சென்றுள்ளார்.

ஏற்கனவே பெண் ஊழியர்களுடன் கால்நடை துறை இயக்குனர் பேசிய உரையாடல் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது பத்மநாபன் தரப்பில் ஒரு பெண் அதிகாரி டாக்டரின் கணவரிடம் சமரச முயற்சி மேற்கொண்டது தொடர்பான உரையாடல் ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பெண் டாக்டரின் கணவன்: ஹலோ.

பெண்(பத்மநாபன் தரப்பு) : டாக்டர் நான் பேசுகிறேன். அவர் மந்திரி முன்னால் வந்து நான் காலில் விழுகிறேன் அம்மா என்கிறார்.

டாக்டரின் கணவர்: மந்திரி கிட்ட நாங்க போகல மேடம். மந்திரி அவரு ஆளு மேடம். அது தேவையில்லை மேடம்.

பெண்: எல்.ஜி. (கவர்னர்) கிட்ட அவருக்கு ரொம்ப பயமா இருக்காம். மேடத்துக்கிட்ட சாரி கேட்டா அவங்க சம்மதிக்க மாட்டாங்க. அவங்க டெரர் ஆன ஆளுமா. நானும், எனது மனைவியும் வந்து மந்திரி முன்னாடியே காலில் விழுகிறோம் அம்மா என்கிறார்.

டாக்டரின் கணவர்: அதெல்லாம் மேடம். இவ (டாக்டரின் மனைவி) தப்பா சொல்லிட்டா என்று கூறி நான் புகாரை மாத்துவது ஏற்க முடியாது மேடம். ஆனால் இதோடு நிறுத்தி விட ஆசைப்பட்டால் எல்.ஜி.யை பார்த்து சமாதானம் பேசட்டும்.

பெண்: ஒரு நிமிடம் சார்..

டாக்டரின் கணவர்: இல்லை மேடம் ஒரே ஒரு லைன் தான் மேடம். நாங்க மந்திரிகிட்ட போகும் போது அவர் வந்திருந்தால் ஓ.கே. சொல்லி இருப்போம். நாங்க எல்.ஜி. கிட்ட போன பிறகு அவர் வந்து சமாதானம் பேசினால் அவர் எல்.ஜி. கிட்டதான் போய் சமாதானம் பண்ணணும். இதோட முடியணும் என்று அவர் நினைச்சா எல்.ஜி. கிட்ட போறது நல்லது. இல்லைனா தோண்ட தோண்ட நிறைய வரும். அவருக்கு ஒன்றுமே கிடைக்காம போயிடும். ஈவன் பென்ஷன் கூட கிடைக்காது. நடுத்தெருவுக்கு வந்திடுவாரு. டிகிரி கூட கேன்சல் ஆகி விடும்.

பெண்: சரி நான் பேசுறேன் அப்புறமா..

இவ்வாறாக அந்த உரையாடல் முடிவடைந்தது.

இந்த உரையாடல் தொடர்பாக உள்ளூர் புகார் குழு அதிகாரிகள் தமிழகத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரிக்க முடிவு செய்த இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் வேறு மாநிலத்தை சேர்ந்த அதிகாரி என்பதால் இதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே கோர்ட்டில் அனுமதி பெற்று அந்த பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com