

கூட்டணியில் சலசலப்பு
அவுரங்காபாத் மாவட்டத்திற்கு சம்பாஜிநகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று சிவசேனா கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தற்போது இந்த இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் அங்கம் வகித்து ஆட்சி செய்து வரும் நிலையில், சிவசேனா மீண்டும் தனது அவுரங்காபாத் பெயர் மாற்ற கோரிக்கையை சமீபத்தில் முன்வைத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
அதுமட்டும் இன்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவுரங்காபாத் பெயரை சாம்பாஜிநபர் என வெளிப்படையாக அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சூசகமா அறிவிப்பு
இந்த சலசலப்பு அடங்குவதற்குள் சிவசேனா அரசு உஸ்மனாபாத் பெயர் மாறுதல் அறிவிப்பையும் சூசகமாக முன்வைத்து உள்ளது.
மரத்வாடா மண்டலத்தில் உள்ள உஸ்மனாபாத் மாவட்டத்தில் 430 படுக்கைகளுடன் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கும் திட்டத்திற்கு மராட்டிய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் அறிக்கையில், உஸ்மனாபாத் மாவட்டத்தை தாராஷிவ் என குறிப்பிட்டு உள்ளது.
சிவசேனா கட்சி உஸ்மனாபாத் மாவட்டத்தை தாராஷிவ் என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளது.
ஏற்கனவே அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் காங்கிரஸ் கட்சி, சிவசேனா கட்சியின் இந்த நிலைப்பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றே தெரிகிறது.
இதனால் மகா விகாஸ் கூட்டணி கட்சிகளும் விரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.