சேலத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

சேலத்தில் பலத்த மழையின் போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சேலத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
Published on

சேலம்,

சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சேலம் அத்வைத ஆசிரம ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. பின்னர் அந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

சேலம் அம்மாபேட்டை வடக்கு கிருஷ்ணன் புதூரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் மழையின் போது தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. குறிப்பாக கழிவுநீருடன் மழைநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். மேலும் சாலையிலும் கழிவுநீருடன் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் மழைநீரை அப்புறப்படுத்த கோரியும், சாக்கடை கால்வாய் வசதி அமைக்க கோரியும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்களிடம், இந்த பகுதியில் விரைவில் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சங்ககிரியில் 53 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-39, வாழப்பாடி-24, மேட்டூர்-3.2, எடப்பாடி-2.4, ஆணைமடுவு-2.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com