மந்தாரக்குப்பம் பகுதியில் கனமழை: ஏரி மண் கரைந்து பயிர்களை மூழ்கடித்தது - விவசாயிகள் கவலை

மந்தாரக்குப்பம் பகுதியில் பெய்த கனமழையால் ஏரி மண் கரைந்து விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மந்தாரக்குப்பம் பகுதியில் கனமழை: ஏரி மண் கரைந்து பயிர்களை மூழ்கடித்தது - விவசாயிகள் கவலை
Published on

மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் அருகே வடக்குவெள்ளூரில் மூப்பனேரி உள்ளது. 92 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுமார் 400 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிக்கு என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து திறந்து விடப்படும் நீர் கரி ஓடை வழியாக வருகிறது.

தற்போது இந்த ஏரி முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் காணப்பட்டது. இதனால் ஏரியை தூர்வாரக்கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மந்தாரக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கரி ஓடை வழியாக மூப்பனேரிக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இதனால் ஏரியின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மந்தாரக்குப்பம் பகுதியில் கனமழை பெய்தது. மேலும் என்.எல்.சி. சுரங்கத்தில் தேங்கிய மழைநீரை அதிகாரிகள் கரி ஓடை வழியாக திறந்து விட்டதாக தெரிகிறது.

இதில் கரி ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரால், ஒரு சில மணி நேரத்தில் மூப்பனேரி நிரம்பியது. மேலும் ஏரி நிரம்பி கரைகளின் வழியே தண்ணீர் வெளியேறியது.

இதனால் ஏரியின் கரையின் மண் கரைந்து அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து மணிலா, நெல் உள்ளிட்ட பயிர்களை மூழ்கடித்தது. இதன் காரணமாக பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து ஏரி கரையின் மண் கரைந்து வெளியேறுவதால் பெரும்பாலான விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் ஏரிக்கரையை உடனே சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com