5 நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை வட கர்நாடகத்தில் மீண்டும் கனமழை நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின

வட கர்நாடகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மக்காச்சோளம், நெல், வெங்காயம் உள்பட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.
5 நாட்களுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை வட கர்நாடகத்தில் மீண்டும் கனமழை நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்துவிட்டது. இந்த மழையின்போது, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வட கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை கொட்டியது. இதில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த மழைக்கு 90-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது தான் அந்த பகுதிகளில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியது.

இந்த நிலையில் வட கர்நாடகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தார்வார், பெலகாவி, பாகல்கோட்டை, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நவிலுதீர்த்த அணை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் முழுவதும் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இதனால் மல்லபிரபா அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. அதில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் உப்பள்ளி-சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் நீருக்குள் மூழ்கிவிட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகாவில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெங்காய பயிர் நீரில் மூழ்கிவிட்டது.

சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகாவில் கனமழை பெய்த காரணமாக, பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. கோவில்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் வட கர்நாடகத்தில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் ஹாசன், சிவமொக்கா, சிக்கமகளூரு, தட்சிணகன்னடா, குடகு ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் மட்டும் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை காரணமாக பாக்கு தோட்டங்களில் தண்ணீர் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிவமொக்கா மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு, நீண்ட காலம் வறண்ட நிலையில் காட்சி அளித்த வேதாவதி ஆற்றில் தண்ணீர் சீற்றத்துடன் பாய்ந்தோடுகிறது. அந்த பகுதிகளில் நந்திபுரா கிராமத்தில் உள்ள சாலை பாலத்தை மழைநீர் அடித்து சென்றது. மராட்டியத்தில் கனமழை பெய்து வருவதால், நாராயணபுரா அணையில் இருந்து வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ராய்ச்சூர் மாவட்டம் சீலஹள்ளி பாலம் நீரில் மூழ்கிவிட்டது.

ஹாவேரியில் பெய்த கனமழைக்கு ஹெக்கேரி ஏரி அருகே மழை நீரில் ஒருவர் அடித்து செல்லப்பட்டார். இரேகூர் தாலுகாவில் பெய்த மழைக்கு 1,500 கோழிகள் நீரில் மூழ்கி செத்துவிட்டன. மலைநாடு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால், பல்லாரி மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அந்த அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹம்பி சாலு மண்டபம், புரந்தரதாசர் மண்டபம், ராமலட்சுமண கோவில் ஆகியவற்றுக்குள் நீர் புகுந்துள்ளது. பெலகாவி கோகாக் நகரிலும் பலத்த மழை பெய்தது. மைசூருவில் நேற்று காலை முதலே மழை பெய்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் அவதிக்குள்ளாயினர்.

பெங்களூருவில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தபடி இருந்தது. மதியம் 3 மணிக்கு மேல் மழை சற்று பலமாக பெய்தது. இதுகுறித்து பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரி சி.எஸ்.பட்டீல் கூறும்போது, அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கில் பலமான காற்று வீசுவதால் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் அடுத்த 5 நாட்கள் மழை பெய்யும். வட கர்நாடகம், தென்கர்நாடகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com